கவிதைகள் (1)

இன்றியமையா இடைவெளிகள்

கரு-கரு மையை தலைக்கும்
வெண்மை க்ரீமை முகத்திற்கும்
பூசுபவன் தான்
நிறங்கள் கொஞ்சம் இடம் மாறினாலும்
கவலை கொள்கிறான்
தலை முடிக்கும்
முகத்திற்கும்
இடைவெளி
இம்மியளவு
ஆனாலும் இன்றியமையாததாகிறது

கணநேரம்

வாழ்த்துபவன் கையிலிருந்து
வாழ்த்துப் பெறுபவன் கைகளுக்கு
கைமாறும் நேரமே
பூங்கொத்தின் பெருவாழ்வு

அந்த ஒரு கணத்திற்காக
வளர்க்கப்படும் பூக்கள் எத்தனையோ

வாழ்த்தின் வசீகரத்தை
வழங்கிவிட்டு
ஒதுங்கிவிடுகின்றன பூங்கொத்துகள்

வாடும் பூங்கொத்துகள்
உணர்த்துவது ஒன்றைத்தான்
உன் வாழ்வின் வசந்தத்தை
நீளம் தீர்மானிப்பதில்லை.

நீக்கமற

தாயின் தாலாட்டு
ஏழ்மையின் விளையாட்டு

காதலியிடம் மோகம்
தண்ணீர்த் தாகம்

அறுசுவையின் ருசி
ஏழையின் வயிற்றுப்பசி

அரசியலின் நாடகம்
முதுகெலும்பில்லா ஊடகம்

பொய்யும் பித்தலாட்டம்
காசுக்காக பேயோட்டம்

போலிச் சாமியார்கள்
தீக்குச்சியோடு மாமியார்கள்

விளைச்சலில்லா நிலங்கள்
விண்ணேறும் விண்கலங்கள்

கோயிலில் குடமுழுக்கு
சாதிக்காக வழக்கு

சுவையில்லா ஆப்பிள்
வருடத்திற்கோர் ஆப்பிள்

நாம்

நீக்கிவிட்ட நிஜப் பூக்கள்
நீக்கமற நிறைந்த காகிதபூக்கள்

திடீரென தோன்றியவை

பண்டமாற்று

சில்லறை இல்லையென
கையில்
திணிக்கப்படும் சாக்கெலெட்டுகள்
சுவைப்பதில்லை

மாற்றம்

கப்பலாகும்
காகித குப்பைகளுக்கு
இப்போது
குட்டைகள் கிடைப்பதில்லை

க்வாலிட்டி

விவசாயின் கழுத்திலேறும்
தூக்குக் கயிற்றை மட்டும்
ஏன்
இத்துனை தரத்தோடு செய்தார்கள் ?

Uthama Villain

கமலஹாசன் படம் என்றதுமே ‘Expect the Unexpected’ என்பது ஒரு வழக்கமாகிவிட்டது : கதைக்களமாகயிருக்கட்டும், நவீன யுக்திகளாயிருக்கட்டும் கமலின் அளவிற்கு சினிமாவை உள்வாங்கியவர்கள் அரிதிலும் அரிது.

சினிமாவில் இலக்கியத்தையும் தொன்மை வாய்ந்த கலைகளையும் இணைத்து ஒரு மீட்டுருவாக்கம் செய்வதில்/செய்ததில் கமலுக்கு நிறைய பங்கிருக்கிறது.

உலக நாயகன் போன்ற அடையாளங்களுக்குள் அடங்கிவிடாமல் புதிய முயற்சிகளாய் தன்னை மீண்டும் மீண்டும் challenge செய்துகொண்டு, அதில் தன்னன் செப்பனிட்டுக்கொண்டும் புனரமைத்துக்கொண்டும் வருகிறார், பல வருடங்களாக.

கமலஹாசனின் சினிமா மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் ஒரு சாதாரண தமிழனை இலக்கிய மற்றும் கலை ரசனையிடம் இட்டுச் சென்ற முக்கியமான பணியை கமல் செய்து வருகிறார்.

அவ்வகையில் உத்தம வில்லன் படமும் ஒரு சிறப்பான மைல்கல் என்று தான் சொல்லவேண்டும்.

உத்தம வில்லன் படத்தில் உத்தமமான அம்சங்கள் என நான் கருதுவன :

1. படம் முழுக்க இழையோடும் மெல்லிய பகடி. சில ஆண்டுகளுக்கு முன் “தமிழ்ப்படம்” என்ற படத்தில் சினிமாவின் க்ளிஷேக்களை உடைக்கிறேன் என்ற போர்வையில் திரைத்துறையையே கொச்சைப்படுத்தப்பட்டது. இந்தப் படத்தில் “slap-stick comedy” எனப்படும் எளிய சுவையில்லாத காமெடியை அள்ளித் தெளிக்காமல், ஒரு செரிவான சுவைமிகுந்த சினிமா பகடியை இழையோடச் செய்திருப்பது ரசனைக்குரியது.

2. கலைத்தேர்வு : கமல் தேர்ந்தெடுத்த ‘கதைக்குள் கதைக்கு’ கிராமிய மணம் கமிழும் நாட்டார் கலை மற்றும் தீயம் சாலப் பொருத்தமான தளமாக உள்ளது.

3. மனோரஞ்சன் எனும் நடிகனின் சினிமா ஆதங்கமும் அவன் மீது சுமத்தப்படும் வியாபார நிர்பந்தங்களும் சரியாக கையாளப்பட்டிருக்கிறது. சில சமயம் விரைவாக சொல்லப்படும் விஷயங்கள் அழுத்தமாக சொல்லப்படாமல் போவதுண்டு. தன் இறுதி நாட்கள் நெருங்கி விட்டதை உணரும் மனோரஞ்சனோடு அவன் தன் சினிமா விழைவை பூர்த்தி செய்யவானா என்ற ஆர்வம் பார்வையாளனையும் உடனேயே தொற்றிக்கொள்கிறது.

4. கதைக்குள் அமைத்த கதையை எளிமாயக அமைத்தது சிறப்பாக உள்ளது. வெளியே நடக்கும் மனோரஞ்சனின் கணமான ‘நிஜக் கதைக்கு’ perfect contrast ஆக உத்தமனின் கதை சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் எடுத்திருக்கும் கலைத் தளத்தின் சிறப்புகளையும் சுவை அம்சங்களையும் சிதற விடாமல் அமைக்க, எளிமையான கதையம்சம் பேருதவியாக இருக்கிறது.

5. உத்தமனின் கதை சொல்லியிருக்கும் விதம், கமலை இரண்டு காரக்டர்களிலும் பொருத்தி ரசிக்க ஏதுவாயிருக்கிறது. தேவைக்கு அதிகமாக உத்தமனின் கதை ஒரு “காட்சிப்பிடிப்பு” என்று காட்டாமல் இருப்பது நம்மை கதையை நெருங்கி ரசிக்க வைக்கிறது.

6. மனோரஞ்சனின் டாக்டர் அர்பணாவுடனான உறவு சொல்லும் பரிமாணம் கொஞ்சம் புதிது. There are enough hints to suggest that the relationship was platonic at the start. From being a platonic relationshipஆக இருந்து பின்னர் அது உறவாக மாறியிருக்கக்கூடும் என்பதை ரசிகனின் யூகத்திற்கு விட்டிருக்கிறார்.

7. தன் மகளை பார்க்கும் தருணத்தில், கமலுக்கே உரிய underplaying of emotions மிக அருமை.
8. பலரும் குறிப்பிட்டிருப்பதைப் போல கே. பாலச்சந்தருக்கு இது ஒரு fitting farewell என்பதில் சந்தேகமில்லை.

தன்னுடைய ஹீரோ இமேஜை உடைத்து புதிய களங்களை முயற்சிப்பதை கமல் எப்போதோ தொடங்கிவிட்டார். உத்தமவில்லன் மூலம் தன் வயதிற்கு ஏற்ற கதைக்களங்களில் புதிய பரிமாணங்களையும் புகுத்த தொடங்கியிருக்கும் முயற்சியாகப் பார்க்கிறேன்.

நட்பு

ஒரு

இளைப்பாறும் பொழுதிலே

இறைவனை கண்டேன்

“கேள்வி கேட்கலாமா” என வினவினேன்

தலையசைத்ததும் தொடுத்தேன்

கேள்விக் கணைகளை

அன்பென்றால் யாதெனக் கேட்டேன்

அரவணைத்துப் பார் என்றான்

அறிவென்றால் யாதெனக் கேட்டேன்

அறிந்து நடவென்றான்

தோழமை எனின் யாதெனக் கேட்டேன்

தோள் கொடுத்துப் பார் என்றான்

இன்பமென்றால் யாதெனக் கேட்டேன்

இருப்பதை கொண்டு இருத்தலென்றான்

உயிர் என்றால் யாதெனக் கேட்டேன்

உனக்கான வாய்ப்பென்றான்

இறுதியில்

நட்பென்றால் யாதெனக் கேட்டேன்

உன் மீது நான் கொள்ளும்

பொறாமைக்கு காரணமென்றான் !

ஃபீனீக்ஸ் பறவை

 

சாலையோரத்து

செறுப்புக் கடையது

 

அங்கு

பளபளக்கும் செறுப்புகள் இல்லை

நவநாகரீக காலணிகள் இல்லை

ஆள் உயர கண்ணாடி இல்லை

குஷன் வைத்த இருக்கையும் இல்லை

 

சற்று கூன் விழுந்த கிழவனவன்

அவன்

பொறுக்கி வைத்த ஆணிகள்  உண்டு

அறுந்த செறுப்புகளின் எச்சங்கள் பலவுண்டு

 

காதலியை தொலைத்த வாலிபன் போல

ஒற்றைச் செறுப்புகளும் உண்டு

வலதை இழந்த இடதும்

இடதை இழந்த வலதும்

குமிந்த ஒரு ஓரம்

அவைகளுக்கு என்ன வேலை

கிழவனுக்கே தெரியாது

 

புழுதி பறக்கும் சாலை

ஆலாய் பறக்கும் மக்கள்

யாருக்கும் கடையோ கிழவனோ

ஒரு பொருட்டேயில்லை

அறுபடும் வரை

 

அறுந்த செறுப்புகளுக்கு

அவனே உயிர் ஊற்றுவான்

லாவகமாய் தைத்து தருவான்

இவன் ஆணி அடிப்பது

உயிர் தருவதற்கு மட்டுமே

 

இவனுக்கென்று

நிரந்திர இடமில்லை

அவனுக்கு

தேவையும் இருந்ததில்லை

எல்லா இடங்களில்

செறுப்புகள் அறுபடுகின்றன

ஒரே மாதிரியாக

 

அவ்வப்போது

சட்டம் தன் கடமையை செய்யும்

இவன் கடை

துகிலுரியப்படும்

கிருஷ்ண பரமாத்மாக்கள்

இவனுக்கு

காட்சி அளித்ததேயில்லை

 

நொறுக்கப்பட்ட கடையிலிருந்து

எது மீள்கிறதோ

அதையெடுத்து நகர்கிறான் கிழவன்

அவனுக்குத் தெரியும்

ஆணிகளும்

ஊசிகளும்

அறுபட்ட செறுப்புகளும்

மீண்டும் சேருமென்று

 

நகர நெருப்பிலே தீய்ந்து

மீண்டும்

மீண்டும்

எழும்

ஃபீனீக்ஸ் பறவை அவன்

மேகங்களோடு பேசுகிறேன்

விமானத்தில்

ஜன்னலோர இருக்கை

வெளியே திட்டுத் திட்டாய்

வெண் மேகக் கூட்டம்

 

வெள்ளை நுறையைக் கொட்டி

உலர்த்துவதைப் போல் ;

பனிக்கட்டியை பலூனில் கட்டி

பறக்கவிட்டதைப் போல் ;

பறவைகள் இளைப்பாற கட்டிய

சுமைத்தாங்கி கற்களைப் போல்

 

மேகங்களை எந்தச் சிற்பியாலும்

செய்யமுடியாது போலும்.

 

வட்டங்களிலும்

சதுரங்களிலும்

முக்கோணங்களிலும்

மேகங்களுக்கு நம்பிக்கையில்லை

அவை தன்னிச்சையானவை

 

கூர்ந்து கவனிக்கிறேன்

அது தன்னிச்சையுமல்ல

குழந்தைகளின் வண்ண ஏட்டில்

வரைந்ததைப் போல

இருக்கின்றன மேகங்கள்

நம்மை விட குழந்தைகளை

அறிந்துவைத்திருக்கிறது மேகம்

 

தேவதையொருத்தி மேகக்கூட்டத்திலிருந்து

எட்டிப் பார்ப்பாளோ

ஏக்கமாகப் பார்க்கிறேன்

கடக்கும் விமானங்களை

தேவதைகள் கண்டுகொள்வதில்லை

 

வெள்ளைக் காடாய்

ஒரு மேகம்

அருகேயே

நெற்றிப் பொட்டாய்

இன்னொரு மேகம்

அவைகள் பேசிக்கொள்ளுமா ?

 

நீ பெரியவனா நான் பெரியவனா ?

யார் இதில் அதிக வெண்மை ?

மேகங்களுக்குள்ளேயும்

போட்டிகள் வருமா ?

 

திடீரென பிரிந்தும்

திடீரென சேர்ந்தும்

மேகங்கள் வாழ்கின்றன

அதனாலேயே

இப்புகை அலங்காரங்கத்தில்

பகை அகங்காரங்கள்

வளர்வதில்லை

 

மேகங்களின் ஊடேயே

செல்கிறது விமானம்

கொந்தளிப்பென்று அறிவித்து

இருக்கை கச்சையை

இறுகக் கட்டிக்கொள்ளச் சொல்லப்படுகிறோம்

இருகரம் நீட்டி வரவேற்கும்

மேகத் தாலாட்டையும்

மேக சம்பாஷணைகளையும்

மனிதர்கள் என்றுமே

புரிந்துகொள்வதில்லை

 

மாறாக

வாயு மண்டலத்தை

விஷ மண்டலாமாக மாற்றி

முன்னேற துடிக்கிறது

விந்தையான உலகம்

 

தரையிறங்கும் நேரம் வந்துவிட்டது

காதலோடு மேகங்களை பார்க்கிறேன்

பிரிவுத் துயரம் எனக்கு மட்டும்தான் போலும்

சந்தோஷமாக இருப்பதை மட்டுமே

மேகங்கள் அறிந்திருக்கின்றன !

Follow

Get every new post delivered to your Inbox.